உம்ரா வழிகாட்டி (Guide)
உம்ரா செய்வது எப்படி என்பது தொடர்பான சுருக்கமான & Step by Step உம்ரா வழிகாட்டுதல்கள்.
உம்ரா என்றால் என்ன?
உம்ரா என்ற சொல்லுக்கு பொதுவாக சிறிய பயணம் என்று பொருள். இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில், உம்ரா என்பது ஆறு முக்கிய வணக்கங்களை உள்ளடக்கிய ஒரு வழிபாடாகும். அவை:
இஹ்ராம் அணிதல், தல்பியா கூறுதல், புனித கஅபாவைச் சுற்றி வருதல் (தவாஃப்),
மகாமே இப்ராஹிம் அருகே தொழுதல், ஸஃபா மற்றும் மர்வா மலைகளுக்கிடையில் சயீ (தொங்கோட்டம் ஓடுதல் அல்லது விரைவாக நடத்தல்), தலை முடியை மொட்டையடித்தல் அல்லது குறைத்துக் கொள்ளுதல். இந்த ஆறு அம்சங்களும் நிறைவேற்றப்பட்டாலே உம்ரா முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும். தனது அடியார்கள் மீது அன்பும், கருணையும் மிக்க அல்லாஹ், நமது வணக்கங்களை ஏற்றுக்கொள்வானாக!
உம்ராவின் வழிமுறைகள்
Step 1 : இஹ்ராம்
இஹ்ராம் என்பது ஒரு புனிதமான ஆன்மீக நிலையாகும்.
மீகாத் எல்லையில் குளித்து, உடலில் நறுமணம் பூசி, தைக்கப்படாத இரு வெண்ணிற ஆடைகளை அணிந்து, உம்ரா செய்யப் போகிறோம் என்ற உறுதியான எண்ணத்துடன் - அல்லாஹும்ம லப்பைக்க உம்ரதன் - என்ற நிய்யத்தை கூறி, அல்லாஹ் ஹராமாக்கிய சில செயல்களைத் தவிர்த்து, உளத்தூய்மை மற்றும் இறையச்சத்தோடு, புனித கஃபாவை நோக்கி பயணம் மேற்கொள்வதே இஹ்ராம்!.
Step 2 : தல்பியா கூறுதல்
தல்பியா என்பது ஹாஜிகள் இஹ்ராம் அணிந்த பின், ஆண்கள் சப்தமாகவும், பெண்கள் அமைதியாகவும்,
புனித கஃபாவை அடையும் வரை தொடர்ச்சியாக கூறப்படும் ஒரு சிறப்புமிக்க பிரார்த்தனையாகும். இதன் மூலம் அல்லாஹ்வின் மகத்துவத்தை போற்றி, ஹாஜிகள் தங்களின் ஆழ்ந்த இறைவிசுவாசத்தையும், அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாக கீழ்ப்படிவதற்கான தங்களின் உறுதியான சரணடைதலையும் வெளிப்படுத்துகின்றனர்.
தல்பியா துஆ:
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، انَّالْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لا شَرِيكَ لَكَ
லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக .
இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.”
Step 3 : தவாஃப்
தவாஃப் என்றால் சுற்றி வருதல் என்று பொருள்.
இஸ்லாமிய மார்க்க அடிப்படையில், ஹாஜிகள் இஹ்ராம் அணிந்த நிலையில்,
புனித கஃபாவை, ஹஜருல் அஸ்வத் அமைந்திருக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து,
இடமிருந்து வலப்புறமாக,
ஏழு சுற்றுகள் வலம் வருதலையே அல்லது சுற்றி வருவதையே தவாஃப் என அழைக்கப்படுகிறது. தவாஃப் செய்ய ஆரம்பிப்பதும் முன் ஒளு செய்வது கட்டாயமாகும் .
Step 4 : மகாமு இப்ராஹிம்
மகாமே இப்ராஹிம் என்பது நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி, புனித கஃபாவைக் கட்டியபோது ஏறி நின்ற இடம் அல்லது அவர்கள் நின்று தொழுத இடத்தை குறிக்கும். ஹாஜிகள் ஏழு சுற்றுகள் தவாஃப் செய்து முடித்தவுடன், மகாமே இப்ராஹீம் முன் நின்று இரண்டு ரத்அத்கள் தொழு வேண்டும்.
Step 5: ஜம்ஜம் நீர் அருந்துதல்
ஜம்ஜம் நீர் என்பது புனிதமான, மனித உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல தாதுக்கள் நிறைந்ததுமான ஒரு அற்புதமான நீராகும். இந்நீர், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் துணைவியார் அன்னை ஹாஜர் (ரலி) அவர்களுக்கும் பிறந்த நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு, அவர்களின் குழந்தைப் பருவத்தில் அல்லாஹ்வின் அருட்கொடையாக வழங்கப்பட்டது.
உம்ரா பயணத்தின் போது, ஹாஜிகள் ஏழு சுற்றுகள் தவாஃப் நிறைவு செய்த பின் ஜம்ஜம் நீர் அருந்துவது, உலமாக்கள் வழங்கிய மார்க்க விளக்கங்களின் அடிப்படையில், விரும்பத்தக்க (முஸ்தஹப்) ஒரு செயலாகும்.
Step 6: ஸயீ
ஸயீ என்பதற்கு வேகமாக நடப்பது/ஓடுதல் என்று பொருள்.
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில், ஸஃபா மற்றும் மர்வா மலைகளுக்கிடையில் ஏழு சுற்றுகள் நடப்பதே ஸயீ எனப்படுகிறது.
ஸயீ, ஸஃபா மலையிலிருந்து தொடங்கி மர்வா மலையில் முடிவடைகிறது. இதன் படி,
ஸஃபாவிலிருந்து மர்வாவிற்கு நான்கு சுற்றுகளும், மர்வாவிலிருந்து ஸஃபாவிற்கு மூன்று சுற்றுகளும்,
இவ்வாறு மொத்தமாக ஏழு சுற்றுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
ஸஃபா மற்றும் மர்வா மலைகளுக்கிடையில், பச்சை நிற விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில்,
ஆண்கள் சற்று வேகமாக நடக்க அல்லது ஓட வேண்டும்.
Step 7: முடியை மொட்டையடித்தல்/ குறைத்தல்
ஸயீ முடிந்ததும், ஆண்கள் தலைமுடியை முழுமையாக மொட்டையடிப்பது (ஹல்க்)
அல்லது முடியை குறைப்பது (தக்சீர்) கட்டாயமாகும். இதில், மொட்டையடிப்பது சிறந்த சுன்னத்தாகும்.
மொட்டையடிக்க இயலாத நிலையில், குறைந்தது ஒரு அங்குலம் (சுமார் விரல் நுனி நீளம்) அளவிற்கு
தலைமுடியை கத்தரிக்க வேண்டும். பெண்கள் மொட்டையடிக்கக் கூடாது. அவர்கள் தங்களின் கூந்தலின் நுனியிலிருந்து ஒரு அங்குலம் அளவிற்கு வெட்டுவது (தக்சீர்) மட்டுமே செய்ய வேண்டும்.
இவ்வாறு ஹல்க் அல்லது தக்சீர் செய்தவுடன், உம்ரா நிறைவடைகிறது; அதனுடன் இஹ்ராம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீங்குகின்றன.
உங்கள் புனித பயணத்தை சிறப்பாகவும் இனிதே நிறைவேற்றவும், முழுமையான வழிகாட்டலும் நம்பகமான சேவைகளும் வழங்க எங்கள் நிறுவனம் தயாராக உள்ளது. உங்களின் தேவைகளுக்கேற்ப சிறந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள, எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
